சட்டத்தைத் திருத்தி தொலையுங்கள்!


3 சம்பவங்கள்

சம்பவம் 1 :

ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்கால நாட்களில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில், போக்குவரத்து அமைச்சராக யார் இருந்தாலும் தவறாமல் ஒரு பேட்டி தருவார்கள். "தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"

சம்பவம் 2 :

ஆம்னி பேருந்துகளில் நடக்கும் கட்டணக் கொள்ளையைத் தடுக்க, எல்லா பேருந்துகளிலும் அரசுக்கட்டணத்தை எழுதி ஒட்ட வேண்டும். கூடுதல் கட்டணப் புகார்களைப் பெற புதிய தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று
உத்தரவிட்டிருக்கிறது.

சம்பவம் 3 :

தீர்ப்பைக்கேட்டு பதறி எழுந்த அரசு தரப்பு வழக்கறிஞர், ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க ஏற்கனவே அரசு சார்பில் புகார் எண்கள் அறிவிக்கபட்டிருக்கின்றன. பயணிகள் 04424749001, 04426744445 இந்த எண்களில் புகார் செய்யலாம் என தெரிவித்திருக்கிறார்.

6 அதிர்ச்சிகள்

அதிர்ச்சி 1 :

நேற்று தீர்ப்பு வந்ததும், நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்கள் சிலர் அந்த புகார் எண்ணுக்கு அழைத்திருக்கிறார்கள். போனை எடுத்த அலுவலக உதவியாளர், "இது புகார் தெரிவிக்கும் எண்ணே இல்லை. அரசுத் துறையின் இணை செயலாளர் எண். இந்த எண்ணில் கட்டணக் கொள்ளை தொடர்பான எந்தப் புகார்களும் பெறப்படுவதில்லை" என சொல்லியிருக்கிறார்.

"சரி புகார் செய்ய வேறு தொலைபேசி எண்களைக் கொடுங்கள் எனக் கேட்க, ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கென தனி புகார் எண்களே இல்லை. ஆட்டோ ஓட்டுநர்கள், மீட்டர் பற்றிய புகார்களுக்கு மட்டுமே புகார் எண் இருக்கிறது என்றிருக்கிறார்.

அதிர்ச்சி 2 :

கூடுதல் கட்டணம் பெறும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை என அரசு சொல்லியிருப்பதால் எவ்வளவு கட்டணம் என ஆராய்ச்சியில் இறங்கினால் அதிர்ச்சி காத்திருக்கிறது.

SETC அரசு இணையதளத்தில் சென்னை - திருச்சி இடையே (382கிமீ) சாதாரண பேருந்து கட்டணம் ₹186 .
Red Bus, Makemytrips போன்ற இணைய தளங்களில் (பண்டிகைக் காலங்கள், வெள்ளி, சனி,ஞாயிறு இவற்றை எல்லாம் தண்ணி தெளித்து விட்டுவிடுங்கள்) வார நாட்களில் ஏசி இல்லாத சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ₹450. ஆக எப்படி வெளிப்படையாக இப்படி சட்டத்தை மீறுகிறார்கள் என்று கேட்டால் அடுத்த அதிர்ச்சிக்கு தள்ளுகிறார்கள்.

அதிர்ச்சி 3 :

தமிழ்நாட்டில் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு அரசு பயணக் கட்டணமே நிர்ணயிக்க முடியாது. ஏன்?

அதிர்ச்சி 4 :

தமிழ்நாட்டில் பயணிகள் போக்குவரத்துக்காக ஆம்னி பஸ்களுக்கு அனுமதியே வழங்கப்படவில்லை.
ஐயோ. அப்புறம்.

அதிர்ச்சி 5:

பிறகு எப்படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன ?
ஐம்பது பேர் ஒரு திருமணத்திற்காக வெளியூர் செல்கிறோம் என தனியார் ஆம்னி பேருந்தோடு ஒப்பந்தம் செய்து பேருந்தையே வாடகைக்ககு எடுத்து செல்வோம் இல்லையா, அதுமாதிரி குழுவாக ஆம்னி பேருந்துகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுதான் தினம்தினம் இயக்கப்படுகின்றன. (ஆம்னி பஸ்சுல பக்கத்துல உட்கார்ந்திருக்கிறவன் சட்டப்படி உங்க சொந்தக்காரனாக இருக்கக் கூடும்).

அதிர்ச்சி் 6 :

தமிழ்நாட்டில் Semi Sleeper, Sleeper வகை பேருந்துகளுக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவேயில்லை. வெளிமாநில ரெஜிஸ்ட்ரேசனில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

2 கேள்விகள்

கேள்வி 1 :

சட்டபூர்வமாக தனி நபர் பயணத்திற்கே அனுமதி இல்லாத நிலையில் ஆம்னிபஸ் உரிமையாளர்கள், கூடுதல் கட்டணம் வாங்கக் கூடாதென எப்படி மாநில அமைச்சர் பேட்டி கொடுக்க முடியும்.?

கேள்வி 2 :

அரசு அனுமதியில்லாத பயணத்திற்கு, அரசுத் தரப்பால் கட்டணமே நிர்ணயிக்க முடியாத பயணத்திற்கு எப்படி கட்டணக் கொள்ளை என்று ஒரு புகார் இருக்க முடியும்? அதற்கு எப்படி ஒரு அரசு புகார் எண் அறிவிக்கப்பட முடியும்? அதை எப்படி ஒரு அரசு வழக்கறிஞர் தைரியமாக நீதிமன்றத்தில் சொல்ல முடியும் ?

ஒரு கோரிக்கை!

கூடுதல் பயணக் கட்டணம், கட்டணக் கொள்ளை தொடர்பான புகார் எண், ஆண்டுதோறும் அமைச்சரின் தெம்பூட்டும் பேச்சு , நீதிமன்றத்திற்கு தவறான தகவல் என போங்கு ஆட்டம் ஆடாமல், காலத்திற்கேற்ப மோட்டார் வாகன சட்டத்தைத் திருத்தி தொலையுங்கள்.

അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല: