உள்ளம் உருகுதையா பாடலைப் பற்றி சுவையான தகவல் இதோ..
ஒவ்வொரு கிருத்திகைக்கும் டி.எம்.எஸ்., பழநிக்குச் சென்று முருகனை வழிபடுவது வழக்கம். எப்போதும் ஒரே ஹோட்டலில்தான் தங்குவார். அப்படி அவர் அங்கே தங்கிய ஒரு நாளில், அங்கு பணிபுரியும் ஒரு பையன் அவனுக்குத் தெரிந்த ராகத்தில், 'உள்ளம் உருகுதடா’ என்று ஒரு பாடலை அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்ததைக் கேட்டு, அந்தப் பாடலின் சொல்லிலும் பொருளிலும் மனம் லயித்துப்போனார். இத்தனைக்கும் அந்தச் சிறுவன் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பையனிடம் அந்தப் பாடல் குறித்து விசாரித்தார். அதை யார் எழுதியது, எப்படி அது தனக்குத் தெரிய வந்தது என்கிற விவரமெல்லாம் அந்தச் சிறுவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏனோ தனக்கு அந்தப் பாடல் ரொம்பப் பிடித்துவிட்டதால், மனதில் பதிந்துவிட்டதாகச் சொன்னான். அவனிடம் அந்தப் பாடல் முழுவதையும் வரிக்கு வரி சொல்லச் சொல்லி, எழுதி வாங்கிக்கொண்டார் டி.எம்.எஸ். பின்னர் சென்னைக்கு வந்ததும், அந்தப் பாடலில் 'அடா’ என்று வருகிற இடத்தையெல்லாம் 'ஐயா’ என மாற்றி, இசை அமைத்துப் பாடி வெளியிட, லட்சக்கணக்கான தமிழர்களின் மனங்களில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது 'உள்ளம் உருகுதய்யா...’ என்கிற அந்தப் பாடல். இந்த விவரத்தைதான் டி.எம்.எஸ். தாம் கச்சேரி செய்கிற இடங்களில் எல்லாம் கூறிவந்தார்.
பாடல் பிரபலமாகி, பலப்பல வருஷங்கள் கடந்த நிலையில், 'இமயத்துடன்...’ என்னும் தலைப்பில் டி.எம்.எஸ். பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு முதல்நாள் பூஜை போடுவதற்காக சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்றிருந்தார்கள் டி.எம்.எஸ்ஸும் இயக்குநர் விஜய்ராஜும். பூஜை முடிந்ததும், அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் அவர்களை துர்கை சந்நிதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு கல்வெட்டில் 'உள்ளம் உருகுதடா...’ என்கிற அந்தப் பாடல் செதுக்கப்பட்டு, அதன் அடியில் 'ஆண்டவன்பிச்சை’ என அதை எழுதியவர் பெயரும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதைக் கண்டு, வியப்பும் திகைப்புமாய் அந்த 'ஆண்டவன் பிச்சை’ யார் என்ற தேடலில் இறங்கியபோது, அவர்களுக்குச் சில தகவல்கள் கிடைத்தன.
குடும்பச் சூழ்நிலையின் காரணமாக வயது முதிர்ந்த நிலையில் அநாதரவாகத் திரிந்து கொண்டிருந்த மரகதம் என்கிற பெண்மணி, ஒருமுறை காஞ்சி மடத்துக்குச் சென்றிருந்தார். அங்கே இருந்த சிலர் அவரைப் பிச்சைக்காரி என எண்ணி கேலி செய்து துரத்த, அதைக் கவனித்துவிட்ட மஹா பெரியவா, அவரை அழைத்து ஆறுதல் சொல்லி, 'வருத்தப்படாதே! நீ ஆண்டவன்பிச்சை’ என்று அனுக்கிரஹம் செய்ததுடன், பிரசாதமும் கொடுத்து அனுப்பினார். இறைவனின் அனுக்கிரஹத்தைப் பூரணமாகப் பெற்ற ஆண்டவன்பிச்சை, பின்பு அதே பெயரில் கோயில் கோயிலாகச் சென்று, பல தெய்விகப் பாடல்களைப் பாடினார். அப்படி அவர் இந்தக் காளிகாம்பாள் கோயிலில் பாடியதுதான், 'உள்ளம் உருகுதடா’ என்ற பாடல். அந்தப் பெண்மணி தன்னைப் பற்றி எழுதியிருந்த 'உள்ளம் உருகுதடா’ என்ற பாடல், தன்னையே நாளும் பொழுதும் வழிபடும் டி.எம்.எஸ். அவர்களின் தெய்விகக் குரலில் உலகமெல்லாம் பரவவேண்டும் எனத் திருவுள்ளம் கொண்ட அந்தப் பழநியாண்டவன்தான், இஸ்லாமியச் சிறுவன் மூலமாக இப்படி ஓர் அருளாடலை நிகழ்த்தினான்போலும்!
Tail piece: The tamil song lyric #ullamurugutayya is available in Malayalam here in this blog.
Curtesy: svb
അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ